ஐதராபாத்: இந்தியாவில் அரசியல் கட்சிகளின் ஒழுக்கமற்ற செயல், ஊழல், மனிதாபிமானமற்ற அரசியல் உள்ளிட்ட நிலைப்பாடுகளின் காரணமாக தேர்தல் செயல்முறை அதன் புனிதத்தை இழந்து வருவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் இந்த தேர்தல் கண்காட்சியின் நிலை பிரபலமடைந்து வருவதாக சொல்லப்படுகிறது.
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், தனது சொத்து விவரங்களை மறைத்து வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள்களை வழங்கி வெற்றி பெற்றதாகக் கூறி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அண்மையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவித்தது.
இதேபோல், நாடு முழுவதும் இனி எத்தனை எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற கேள்வி எழுகிறது. கர்நாடகாவின் மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ கவுரி சங்கர் சுவாமி, கடந்த 2018ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பொது மக்களுக்கு போலி காப்பீட்டு பத்திரங்களை வழங்கிய வழக்கில் கடந்த மார்ச் மாதம் கர்நாடக உயர் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் வகையில், குறுக்கு வழிகளில் வெற்றி பெறுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது என்பது மறுக்க முடியாத ஒன்று. இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் தங்களது பதவிக் காலம் முழுவதும் முடித்த பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதால் என்ன பயன் என்றால் அதுவும் கேள்விக் குறியாகவே இருக்கும்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இந்திய தேர்தல் ஆணையத்தின், தலைமை தேர்தல் ஆணையராக இருந்த நசீம் சைதி, வேட்புமனுத் தாக்கலின் போது போலியான தகவல்கள் மற்றும் பிராமானப் பத்திரங்களை தாக்கல் செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடையும் விதிக்கப்படும் என்று கூறினார்.
லஞ்சம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் வழக்குப்பதிவு செய்யப்படும் எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் ஒரு முன்மொழிவை வழங்கியது. அதேபோல் கடந்த 2017 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு மத்திய அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் கடிதம் எழுதப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் முன்மொழிவை அங்கீகரித்து சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வருமா என்றால் அது மில்லியன் டாலர் கேள்வி தான். ஜனதா கட்சித் தலைவரும், அரசியல் ஆர்வலருமான லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன், "உண்மையான அரசியல் என்பது மனித மகிழ்ச்சியை மேம்படுத்துவதாகும். இப்படி ஒரு எண்ணத்தை கனவிலும் நினைக்காத கட்சிகள், சட்ட விரோதிகளையும், அராஜகங்கள் செய்பவர்களையும் தலைவர்களாக்கி வருகின்றனர்" என தெரிவித்து உள்ளார்.
மக்களைத் தூண்டியோ அல்லது அச்சுறுத்தியோ வாக்குகளைப் பெறக் கூடியவர்கள் தான் பெரும்பாலும் வேட்புமனுக்களை தாக்கல் செயவதாகவும், எந்த ஒரு சாமானியனும் சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைக்க முடியாத அளவுக்கு தேர்தல்கள் இப்போது பணக்காரத்தனமாக மாறிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1999ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் பிரசாரத்திற்காக மட்டும் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கூலித் தொழிலாளிகளுக்கு சாராயம், இரவு உணவு என அரசியல் கட்சிகளின் வழக்கமான பிரச்சார யுக்திகள் சாமானிய மக்களின் வாழ்க்கை பொருளாதாரத்தை இக்கட்டான நிலைக்கு தள்ளுகிறது.
எந்த தகவலையும் நொடிப் பொழுதில் லட்சக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்க்கும் டிஜிட்டல் யுகத்தில், அதீத பொருட்செலவில் நடத்தப்படும் பொதுக் கூட்டங்களால் என்ன பயன்? கட்சிகளின் சித்தாந்தங்கள் மற்றும் திட்டங்கள் அனைத்தும் பொது மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய தேர்தல் பிரசாரத்தின் மையமாக இருக்க வேண்டும்.
சமீபகால அரசியல் களத்தில் இது போன்ற செயல்முறைகள் ஓரங்கட்டப்பட்டு வருகின்றன. அதற்கு பதிலாக அருவருக்கத்தக்க வகையிலான தனிப்பட்ட விமர்சனங்கள், சாதிவெறியை தூண்டும் வெறுப்பு கருத்துக்கள் மற்றும் வகுப்புவாத அறிக்கைகள் தான் சமீபகால தேர்தல் பிரசாரங்களின் மையமாக உள்ளன.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் என்ற கருத்து அண்மைக் காலங்களில் வேகமாக மறைந்து வருகிறது என்றால் மிகையல்ல. மோசமான அரசியலால் மூச்சுத் திணறலில் இந்திய ஜனநாயகம் உள்ளது. இந்த இக்கட்டான சூழலில் சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்களுக்கு கடுமையான மற்றும் விரிவான தேர்தல் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.
இதையும் படிங்க :அமலாக்கத்துறை இயக்குனர் பணி நீடிப்பு சட்டவிரோதம்... மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்குபிடி!