தெலங்கானா: தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், மத்திய பாஜகவுக்கு எதிராக தேசிய அளவிலான மூன்றாவது அணியை ஒன்றிணைப்பதில் தீவிரம் காட்டி வருபவர். மத்திய பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சிப்பவர். இந்த மோதல் காரணமாக, தெலங்கானாவில் ஆட்சியைக்கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், டிஆர்எஸ் எம்எல்ஏக்களை தலா 100 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்க பாஜகவினர் முயற்சிப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது. இதற்காக டெல்லியிலிருந்து பாஜக பிரமுகர்கள் வந்ததாகவும், நாகராசிவரு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் வைத்து குதிரை பேரம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. குறிப்பிட்ட பண்ணை வீட்டில் சோதனை செய்த போலீசார், குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் குதிரை பேரம் தொடர்பான குற்றச்சாட்டுகளை பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது.