விஜயநகரம் :ஆந்திராவில் இரண்டு பயணிகள் ரயில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டது. இந்த விபத்தில் 8 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அலமண்டா, கந்தகபள்ளி ரயில் நிலையத்திற்கு இடையே இந்த கோர ரயில் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டு இருந்த பயணிகள் ரயில் மற்றும் விசாகப்பட்டினம் - பால்சா பயணிகள் ரயில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் இரு ரயில்களின் மூன்று பெட்டிகள் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
விபத்து நடந்த இடத்தில் உள்ளூர் நிர்வாகம், தேசிய பேரிடர் மீட்பு படை மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்க விசாகப்பட்டினம், அனகபள்ளி உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆம்புலன்ஸ்கள் விரைந்து உள்ளன. முழுவீச்சில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு பொது மக்களை காக்குமாறு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
விபத்து குறித்து தகவல் அறிய மத்திய ரயில்வே அமைச்சகம் உதவி எண்களை அறிவித்து உள்ளது. BSNL பயனர்கள் 08912746330, 08912744619 என்ற எண்ணிலும், Airtel sim பயனாளிகள் 81060 53051 81060 53052 என்ற எண்களையும் BSNL sim பயனாளிகள் 85000 41670, 85000 41671 என்ற எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என மத்திய ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது.