பஞ்சாப்:தற்போதைய காலகட்டத்தில் இளைய தலைமுறையினர் செல்போன்களில் குடிபுகுந்துவிட்டனர். இதனால் வீடுகளில் உள்ள முதியோர்கள் தனித்துவிடப்பட்டுள்ளனர். பேரக்குழந்தைகளுடன் விளையாடும் சூழல் இல்லாமல் தனிமையில் வாடுகின்றனர். பல முதியவர்கள் இந்த தனிமையை கையாள முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கக்கார் என்ற கிராமத்தில் முதியவர்கள் தங்களது தனிமையை போக்க புதிய வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக அந்த கிராமத்தில் ஏதேனும் விசேஷம் நடைபெறும்போது, முதியவர்கள் உள்பட அனைவரும் ஒன்று கூடுவார்கள். அப்போது, குருத்வாராவில் இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சியில் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள்.
இதேபோல் தினமும் குருத்வாராவில் ஒன்றுகூடலாம் என்று முதியவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த ஆண்டு முதல் கிராமத்தில் உள்ள மூத்தோர் அனைவரும் அதிகாலையிலேயே குருத்வாராவுக்கு சென்றுவிடுகின்றனர். சமைப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்று, தங்களுக்கு பிடித்த உணவை சேர்ந்து சமைக்கின்றனர். கதை பேசிக் கொண்டே டீ, காபி, உணவு அனைத்தையும் சாப்பிடுகின்றனர். அரட்டை அடித்துக் கொண்டே பாத்திரங்களை சுத்தம் செய்துவிட்டு, மாலையில் வீடு திரும்புகிறார்கள்.
ஆரம்பத்தில் அந்த ஊர் மக்கள் மட்டுமே இதில் கலந்து கொண்ட நிலையில், அடுத்தடுத்த நாட்களில் அருகில் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த முதியவர்களும் தங்களது நண்பர்களை சந்திப்பதற்காக குருத்வாராவை தேடி வர ஆரம்பித்தனர். அனைவரும் ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியாக இருந்தால் உடலும் மனமும் நலமுடன் இருக்கும் என்று கக்கார் கிராம முதியவர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் வசூல் அவதாரத்தை தொடங்கிய அவதார்; மூன்று நாட்களில் ரூ.3,500 கோடி கலெக்சன்