ஹைதராபாத்:டெல்லி அரசு அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிடை மாற்றுவது விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து வருகிறார். டெல்லியை ஆளும் ஆத்மி அரசுக்கு குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம், பணியிடை மாற்றம் குறித்த அதிகாரம் இல்லை. டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் பல்வேறு அதிகாரங்கள் துணை நிலை ஆளுநர் மற்றும் மத்திய அரசிடமே இருந்தது.
எனவே, இந்த அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் வழங்கப்பட வேண்டும் என கடந்த 2019-ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றமும் மாநில அரசின் ஆட்சி மற்றும் நிர்வாகத்தை நிர்வகிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு கிடையாது எனக் கூறி அதிகாரிகள் நியமனம், நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் மாற்றம் ஆகியவற்றில் டெல்லி அரசுக்கு முழு அதிகாரத்தை வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதனை தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்தார். ஆனால் மத்திய அரசு, உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு உடன்படவில்லை. எனவே, டெல்லியில் அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் உள்ளிட்ட பணிகளை நிர்வகிக்க முதலமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் முதன்மை உள்துறை செயலாளர் அடங்கிய தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையத்தை அமைத்து அவசர சட்டத்தை கொண்டு வந்தது.
இந்த அவசர சட்டத்தால் அதிருப்தி அடைந்த அரவிந்த் கெஜ்ரிவால் இச்சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்க, தேசிய அளவிலான எதிர்க் கட்சிகளிடம் ஆதரவை திரட்டி வருகிறார். அதன் முதல் பயணம், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி உடனான சந்திப்பில் தொடங்கி பின்னர் இரண்டு நாள் பயணமாக மகாராஷ்டிராவில் பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான் மற்றும் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவை சந்தித்து ஆதரவு பெற்றார்.