டெல்லி:ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்து சர்ச்சையை கிளப்பிய சங்கர் மிஸ்ரா என்பவர் பெங்களூருவில் இன்று (ஜனவரி 7) கைது செய்யப்பட்டார். பெங்களூருவின் சஞ்சய் நகரில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் பதுங்கியிருந்த மிஸ்ராவை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை வழங்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டிருந்தது. அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து நவம்பர் 26ஆம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு வந்தடைந்தது. இதனிடையே விமானத்தில் பயணித்த வயதான பெண் மீது மதுபோதையில் இருந்த ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சளுக்கு ஆளானதாக பாதிக்கப்பட்ட பெண் டாடா குழும தலைவர் சந்திரசேகரனுக்கு புகார் கடிதம் அனுப்பினார்.
இதற்கு ஏர் இந்தியா தரப்பில் பதிலளிக்கப்பட்டது. அதில், குறிப்பிட்ட ஆண் பயணியை கண்டறிந்துள்ளோம். அவரது பெயரை நோ ஃபிளை லிட்ஸ்டில் (no fly list) சேர்க்க முடிவெடுத்துள்ளோம். அதற்கான பரிந்துரையை அரசுக்கு அனுப்பிவிட்டோம். அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.