பத்ராத்ரி:விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்". இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு நயன்தாரா, சமந்தா ஆகியோர் மீது காதல் ஏற்படும். இருவரிடமும் காதலை வெளிப்படுத்தும் விஜய் சேதுபதி, இருவரையும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறுவார். ஆனால் கடைசியில், இரண்டு ஹீரோயின்களும் விஜய் சேதுபதியை புறக்கணிப்பது போல கதை அமைந்திருக்கும்.
ஆனால் பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், இரண்டு பெண்களை காதலித்து ஒரே மேடையில் அவர்களை திருமணமும் செய்துள்ளார். தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொதகுடேம் மாவட்டத்தில் தான் இச்சம்பவம் அரங்கேறியிருக்கிறது. சர்லா மண்டல் கிராமத்தை சேர்ந்த முத்தாத்தையா - ராமலட்சுமி தம்பதியின் மகன் சத்திபாபு.
இவருக்கு தோஸ்லாபள்ளி கிராமத்தை சேர்ந்த ஸ்வப்னா குமாரியுடன் காதல் ஏற்பட்டுள்ளது. ஸ்வப்னாவிடம், சத்திபாபு தனது காதலை கூற அவரும் ஏற்றுக் கொண்டார். இருவரும் நெருங்கி பழகியதில், ஸ்வப்னா கர்ப்பமானார். இதைத் தொடர்ந்து அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. திருமணம் முடிக்காமல் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், பிரியும் நிலை ஏற்பட்டது. குழந்தையுடன் ஸ்வப்னா தாய் வீட்டில் வசித்து வந்த நிலையில், சத்திபாபு சொந்த ஊருக்கு சென்று விட்டார்.
இதற்கிடையே, குர்ணாபள்ளி கிராமத்தை சேர்ந்த சுனிதாவுடன், சத்திபாபுவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வசித்து வந்த நிலையில், கர்ப்பமான சுனிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த விவகாரத்தை அறிந்த ஸ்வப்னா கிராம பஞ்சாயத்திடம் முறையிட்டார்.