ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த அடப்பா சிவசங்கர் பாபு என்ற நபர், இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேடுவதற்காக மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ளார். அதில் விவாகரத்து ஆகி இரண்டாவது திருமணத்திற்காக பதிவு செய்திருக்கும், படித்த வசதியான வீட்டுப் பெண்களுடன் பேசியுள்ளார். அதில் ஒரு பெண்மணியிடம், தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதாகவும், தனக்கு ஒரு மகள் இருப்பதாகவும், ஐடி துறையில் பணிபுரிந்து 2 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் கூறியுள்ளார்.
விவாகரத்து மற்றும் ஊதியத்தை நம்ப வைக்க போலியான ஆணவங்களை தயாரித்து கொடுத்துள்ளார். இதையடுத்து பெண்ணின் குடும்பத்தினர் வரதட்சணை வழங்கி முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு வேலை விஷயமாக அமெரிக்கா செல்வதாக கூறி மேலும் பணம் வாங்கியுள்ளார். சில நாட்கள் கழித்து அமெரிக்கா பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பணத்தை திருப்பி தரும்படி கேட்டால், சீக்கிரமாக தருகிறேன் என மழுப்பியுள்ளார். பணத்தை திருப்பி தரும்படி வாக்குவாதம் செய்தபோது, தேவைப்பட்டால் போலீசில் புகார் அளித்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அப்போது விசாரணைக்கு போலீசார் அழைத்த நிலையில், மற்றொரு பெண்மணியுடன் காவல்நிலையத்துக்கு சென்றுள்ளார். அந்த பெண்மணி தனது மனைவி என்றும், தான் தர வேண்டிய பணத்துக்கு அவர் சாட்சி என்றும் கூறியுள்ளார். இதையடுத்து இரண்டு பெண்களும் பேசியதில், இருவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.