புதுச்சேரி:உருளையன்பேட்டை தொகுதி, நேரு நகரைச் சேர்ந்த கோவிந்து (55) என்பவர், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இன்று (டிச.27) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் கரோனாவில் இறந்ததாக கூறப்பட்டதால், அவரது உடலை உறவினரிடம் மருத்துவமனை ஒப்படைக்கவில்லை.
இதனால் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில், உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இறந்தவரின் உடலை வழங்க வேண்டும் அல்லது கரோனா வழிமுறையின்படி இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என கோரி, மாவட்ட ஆட்சியர் வல்லவனை காருடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் புதுச்சேரி - வழுதாவூர் சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலுவை மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு கேட்டபோது, கோவிந்து கரோனா பாதிப்பு காரணமாக இறந்ததாக சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீ ராமுலு உறுதிபடுத்தி உள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன் காசநோய் காரணமாக கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிந்துக்கு, இரண்டு நாட்களுக்கு முன் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில் இன்று (டிச.27) காலை 7 மணிக்கு உயிரிழந்தார்.