அமராவதி (ஆந்திரப் பிரதேசம்):ஆந்திர - தமிழ்நாடு எல்லைப் பகுதியான சித்தூர் மாவட்டம், பலமனேர் மண்டலத்துக்கு உட்பட்ட கோதிகுண்டா கிராமம், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. கிராமத்தில் வனவிலங்குகளால் விளைநிலங்களுக்கு சேதம் ஏற்படாமல் இருக்க விவசாயிகள் அங்கு மின்வேலி அமைத்து உள்ளனர்.
பசிதீர்க்க வந்த யானைகள்
இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜுன் 11) 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இப்பகுதியில் உணவு தேடிச் சென்றுள்ளது. இதில் ஒரு யானை மின்வேலியில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து மற்ற யானைகள் அங்கிருந்து மிரண்டு ஓடியுள்ளன.
கண்களை ஈரமாக்கிய யானைக் கூட்டம்
உயிரிழந்த யானையை சுற்றிய யானை கூட்டம் இதையறிந்த, அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். நேற்று (ஜுன் 12) காலை வனத்துறையினர் உயிரிழந்த யானையை உடற்கூராய்வு செய்வதற்காக அப்பகுதிக்குச் சென்றனர்.
அப்போது யானை இறந்து கிடந்த பகுதியைச் சுற்றிலும் 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு அங்குள்ள பொதுமக்களைத் துரத்தியதுள்ளன.
வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்துவிட்டு, யானைக்கு உடற்கூராய்வு செய்தனர். தங்கள் கூட்டத்தில் இருந்த ஒரு யானை உயிரிழந்ததால், துக்கம் தாளாமல் யானைக் கூட்டம் இறந்து கிடந்த யானையைச் சுற்றி வந்த சம்பவம் பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டும் பொதுமக்கள்