டெல்லி: போலி செய்திகளை கண்டறிந்து, அவற்றை அம்பலப்படுத்தும் "ஆல்ட் நியூஸ்" நிறுவனத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைரை, கடந்த 27ஆம் தேதி டெல்லி போலீசார் கைது செய்தனர். 2018-ல் முகமது ஜுபைர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி பதிவு செய்யப்பட்ட வழக்கில், டெல்லி போலீசார் ஜுபைரை கைது செய்தனர்.
செய்தி ஒன்றின் உண்மைத் தன்மையை அம்பலப்படுத்தியதற்காகவே ஜுபைர் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது. ஜுபைரை மேலும் 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள ஜுபைரின் வீட்டிற்கு, ஜுபைருடன் சென்ற டெல்லி போலீசார் சோதனை மேற்கொண்டனர். 2018-ல் பதியப்பட்ட வழக்குத்தொடர்பான ஆதாரங்களைத் தேடி வருவதாகவும், குறிப்பிட்ட ட்வீட்டை பதிவு செய்ய ஜுபைர் பயன்படுத்திய செல்போன் அல்லது மடிக்கணினியை தேடுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
ஜுபைரிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். அதேநேரம், குறிப்பிட்ட ட்வீட்டை பதிவு செய்த செல்போன் தொலைந்துவிட்டதாக ஜுபைர் தெரிவித்துள்ளார். ஜுபைரின் வங்கிப் பரிவர்த்தனை விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆல்ட் நியூஸ் நிறுவன இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது - சமூக ஆர்வலர்கள் கண்டனம்!