தெலுங்கானா (சார்லா): சமீபகாலமாக வயல்களில் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்க ஆளில்லா விமானங்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. மேலும் இந்த விமானத்தை சில விவசாயிகள் சொந்தமாகவும் வாங்குகின்றனர். அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டு தெலங்கானாவில் விவசாயம் செய்து வரும் ஒரு விவசாயி, பூச்சிக்கொல்லி மருந்தினைத் தெளிக்க ஹெலிகாப்டரினை சொந்தமாக வாங்க முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து சுமார் 300 கி.மீ தொலைவில் உள்ளது கொண்டாகான் மாவட்டம், இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ராஜாராம் திரிபாதி என்பவர் தனது 1000 ஏக்கர் பண்ணையைக் கண்காணிக்க ரூ.7 கோடியில் ஹெலிகாப்டர் வாங்க உள்ளார். அதாவது ஹாலந்தின் ராபின்சன் நிறுவனத்தின் ஆர் - 44 (R-44) என்ற மாடல் ஹெலிகாப்டரை முன்பதிவு செய்துள்ளனர். இதில் 4 பேர் உட்காருவதற்கு வசதியாக நான்கு இருக்கைகள் உள்ளன. மேலும் பூச்சிக் கொல்லி தெளித்தல் மற்றும் இதர விவசாயப் பணிகளுக்காக இது தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பா விவசாயிகளால் ஈர்ப்பு: ராஜாராம் இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் சுற்றுலா சென்றபோது விவசாய நிலத்தில் உரம் தெளிப்பதற்கு இந்த ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தியதைப் பார்த்துள்ளார். மேலும் அந்த ஹெலிகாப்டருக்கு நல்ல பலன் கிடைத்து வருவதை அறிந்த பிறகே இந்த ஹெலிகாப்டரை வாங்க முடிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது மகனும், இளைய சகோதரரும் விமானி பயிற்சிக்காக உஜ்ஜயினியில் உள்ள ஏவியேஷன் அகாடமிக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.