லக்னோ:உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஆலம்பாக் ஆனந்த் நகர் ரயில்வே காலனியில், இன்று ஒரு வீட்டின் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்த விபத்து ஏற்பட்டது. வீடு இடிந்து விழுந்த சம்பவத்தைக் கண்ட அப்பகுதி மக்கள், காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படை குழுவினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
பின்னர், அவர்களை மீட்ட காவல் துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஐந்து பேரும் உயிரிழந்ததை உறுதி செய்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் சதிஷ் சந்திரா (40), அவரது மனைவி சரோஜினி தேவி (35), குழந்தைகள் ஹர்ஷித் (13), ஹர்ஷிதா (10), அன்ஷ் (5) ஆகியோர் என்பது தெரிய வந்தது. மேலும், ரயில்வே துறையால் கைவிடப்பட்ட அந்த வீட்டில் முன்னாள் ரயில்வே ஊழியர் சதிஷ் சந்திரா தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
வீட்டை காலி செய்ய ரயில்வே நோட்டீஸ் கொடுத்த நிலையிலும், அவர்கள் வீட்டை காலி செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், வீடு இடிந்து விழுந்த காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.
இதற்கிடையில், லக்னோ மாவட்ட நீதிபதி சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தார். இது குறித்து அவர் கூறுகையில், “ விபத்து குறித்து அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். பழைமை வாய்ந்த ரயில்வே காலனி என்பதால் இது குறித்து ரயில்வே அதிகாரிகளுடன் பேசி, அருகில் உள்ள மற்ற வீடுகளையும் ஆய்வு செய்ய கூறப்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் நிலைமையை அறிந்து, சம்பவ இடத்திற்குச் சென்று அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து, ரயில்வே காலனியில் உள்ள அனைத்து சேதமடைந்த வீடுகளையும் காலி செய்ய உள்ளூர் மக்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க:நொய்டா லிப்ட் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக உயர்வு!