தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருப்பதி லட்டுவுக்கு நெய் கொடுப்பது யார்? - கர்நாடகாவில் மோதும் பாஜக, காங்கிரஸ்! - KMF

திருப்பதி கோயிலுக்கு நெய் விநியோகம் செய்வதை கர்நாடக பொதுத்துறை நிறுவனமான நந்தினி நிறுத்தியுள்ளதாக அம்மாநில பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

திருப்பதி கோயிலுக்கு நெய் விநியோகிப்பதில் கர்நாடக பாஜக வுக்கும் காங்கிரசுக்கும் இடையே சர்ச்சை!
திருப்பதி கோயிலுக்கு நெய் விநியோகிப்பதில் கர்நாடக பாஜக வுக்கும் காங்கிரசுக்கும் இடையே சர்ச்சை!

By

Published : Aug 3, 2023, 9:50 PM IST

Updated : Aug 4, 2023, 3:37 PM IST

திருப்பதி லட்டுவுக்கு நெய் கொடுப்பது யார்? - கர்நாடகாவில் மோதும் பாஜக, காங்கிரஸ்!

பெங்களூரு:திருப்பதி என்றாலே நினைவுக்கு வருவது, லட்டு தான். அந்த லட்டுவை தயாரிப்பதற்காக டெண்டர் முறையில் நெய் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆவின் இருப்பதைப் போல கர்நாடகாவில் நந்தினி பொதுத்துறை நிறுவனம் மூலம் பால்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

கர்நாடகா பால் கூட்டமைப்பு (KMF) மூலம் திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலுக்கு நெய் விநியோகிப்பது தொடர்பாக எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் காங்கிரஸ் அரசுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. திருப்பதி கோயிலை நிர்வகிக்கும் திருமலா திருப்பதி தேவஸ்தானம் (TTD) போர்டானது டெண்டர் முறையில் நெய் விற்பனையாளர்களை தேர்வு செய்கிறது. சமீபத்தில் ஏற்பட்ட பால் விலை உயர்வின் காரணமாகச் சரியான விலையில் நெய் விநியோகம் செய்ய முடியாததால், இந்த வருடம் KMF, டெண்டர் செயல்முறையைக் கைவிட முடிவு செய்தது.

TTD மற்றும் KMF ஆகிய இரு நிறுவனங்களும் இதற்கு பின் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என கூறிய பிறகும், கோயில் நெய் விற்பனையாளர்களை மாற்றியதற்காக கர்நாடக மாநிலத்தில் உள்ள பாஜக, ஆளும் காங்கிரஸ் அரசை குற்றம்சாட்டி வருகிறது.

இது குறித்து பாஜக எம்.எல்.சி சாலவாடி நாராயணசாமி கூறுகையில், “8,000 கிலோ நெய்யை விற்பனை செய்வதற்கான சந்தையை எங்கு சென்று தேடமுடியும். திருப்பதி கோயில்தான் மொத்தமாக வாங்கக்கூடியவர்கள், அவர்களிடம் பேரம் பேச வேண்டும். இது எளிமையான விஷயம் தான். ஆனால் அரசுக்கு அதை செய்ய விருப்பம் இல்லை” எனக் கூறினார்.

இதற்குப் பதிலளித்த காங்கிரஸ், பாஜக ஆட்சியில் இருக்கும்போதே இந்த ஒப்பந்தம் ரத்தானதாகக் கூறியுள்ளது. இதுகுறித்து கர்நாடக அரசின் தலைமைக் கொறடா, சலீம் அகமது கூறுகையில், “பாஜக ஆட்சியில் இருக்கும்போதே இந்த ஒப்பந்தமானது ரத்து செய்யப்பட்டது. இந்த முடிவை எடுத்தது எங்கள் அரசு இல்லை. ஒன்றரை ஆண்டுக்கு முன்பே இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டார்கள்.

நந்தினி பிராண்டு பற்றி இவ்வளவு பேசும் அவர்கள் ஏன் ஒப்பந்தத்தை தொடரவில்லை. இது ஒன்றரை வருடத்துக்கு முன்பே நடந்தவை. தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதனால், காங்கிரஸை குறை சொல்ல முடியாது. அந்த சமயத்தில் அவர்கள் முடிவெடுத்திருக்கவேண்டும். இந்த நிலைமையைக் கையாள்வதில் அவர்களது அரசாங்கம் தோற்றுவிட்டது”, எனக் கூறினார்.

இதுகுறித்து பேசிய KMF அதிகாரிகள் அவர்கள் 2021 - 22ஆம் ஆண்டே விநியோகத்தை நிறுத்திவிட்டதாகவும் எந்தவிதமான சர்ச்சையும் இல்லை எனவும் கூறினார். கர்நாடக பால் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர், ஜக்தீஷ் எம்.கே. கூறுகையில், ''குறைந்த விலையில் விநியோகம் செய்யும் எந்த நிறுவனத்திடம் இருந்தும் நெய் கொள்முதல் செய்வது TTD நிறுவனத்தின் பொறுப்பு.

KMF-ஐ விட குறைவான விலையில் நெய் தருவதாக யாரேனும் ஒப்பந்தம் கேட்டிருப்பார்கள். அதனால் அவர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டிருக்கும் என நினைத்தேன். இது ஒரு சாதாரண நடைமுறை. இதில் எந்த வித சர்ச்சையும் இல்லை. நாங்கள் இனியாவது விநியோகத்தை தொடர முயற்சி செய்கிறோம். விலை ரீதியான சிக்கலால் தன் 2021-22ஆம் ஆண்டே விநியோகத்தை நிறுத்தினோம்'' என அவர் கூறினார்.

இதற்கிடையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், கடந்த 20 ஆண்டுகளில் கர்நாடக பால் கூட்டமைப்பு தொடர்ச்சியாக நெய் வழங்கவில்லை எனத் தெரிவித்தனர். திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி, A.V. தர்ம ரெட்டி பேசுகையில், ''கடந்த இருபது ஆண்டுகளில் தொடர்ந்து நாங்கள் அவர்களிடமிருந்து (KMF) நெய் வாங்கவில்லை.

குறைந்த விலையில் அவர்கள் விநியோகிக்கும்போதே வாங்குவோம். இது KMF-ஐ நிராகரிப்பது அல்ல. நாங்கள் கூறும் விலைக்கு அவர்கள் கூறும் விலை பொருந்தினால் நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம்'' எனக் கூறினார். பா.ஜ., மற்றும் காங்., கட்சிகளுக்கு உள்ளாக இந்த வாக்குவாதம் நீடிப்பதால், வரும் நாட்களிலும், நெய் விநியோகம் தொடர்பான சர்ச்சை நீடிக்க வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: "அரசு ஊழியர்களின் சொத்துப்பட்டியலை வெளியிடுவது கொள்கை முடிவுக்குட்பட்டது" - தமிழக அரசு!

Last Updated : Aug 4, 2023, 3:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details