ஆந்திரா :நடிகை சமந்தாவின் தீவிர ரசிகர் ஒருவர் அவருக்காக கோயில் கட்டி உள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நடிகை சமந்தாவுக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் அவரின் தீவிர ரசிகர் ஒருவர், நடிகை சமந்தாவுக்காக கோயில் ஒன்றை கட்டி உள்ளார். ஆந்திரா மாநிலம் குண்டூர் அடுத்து உள்ள பாபட்லா மாவட்டம், அலபாடு கிராமத்தை சேர்ந்தவர் சந்தீப்.
சமந்தாவின் தீவிர ரசிகரான சந்தீப், அவருக்காக கோயில் கட்டி உள்ளார். இந்த கோயிலின் திறப்பு விழா நாளை (ஏப். 28 ) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பேசிய சந்தீப், நடிகை சமந்தாவின் படங்களை பார்த்து அவரது தீவிர ரசிகராக மாறவில்லை என்றும் பிரத்யூஷா அறக்கட்டளை மூலம் நடிகை சமந்தா பல சேவைகளை செய்து வருவதை அறிந்து அவர் மீது மதிப்பு கூடியதாக அவர் கூறி உள்ளார்.
அதனால் அவருக்கு கோயில் கட்ட தீர்மானித்ததாகவும் அதற்காக தனது வீட்டில் ஒரு பகுதியை ஒதுக்கி கோயில் கட்டி உள்ளதாகவும் சந்தீப் கூறினார். தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நாளை (ஏப். 28) திறப்பு விழா நடத்த உள்ளதாக சந்திப் தெரிவித்தார். தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம், பாலாபிஷேகம் நடத்துவது உள்ளிட்ட செயல்களில் ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்படி தமிழ் சினிமாவில் நடிகை குஷ்புக்கு தான் முதல் முறையாக ரசிகர்கள் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர். அவரை தொடர்ந்து நடிகைகள் நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி, நமீதா, நிதி அகர்வால், மலையாள நடிகை ஹனி ரோஸ் உள்ளிட்ட நடிகைகளுக்கு அவர்களது ரசிகர்கள் கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர்.