Aparna Balamurali: கேரளா:தமிழில் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் அறிமுகமானவர், நடிகை அபர்ணா பாலமுரளி. தொடர்ந்து சர்வம் தாளமயம், தீதும் நன்றும் உள்ளிட்டப் படங்களில் நடித்திருந்தாலும், கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான 'சூரரைப் போற்று' படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
'சூரரைப் போற்று' திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இணையாக, அபர்ணா பாலமுரளியின் கதாபாத்திரம் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அந்தப் படத்திற்காக அபர்ணா முரளிக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. தொடர்ந்து 'வீட்ல விசேஷம்' உள்ளிட்ட தமிழ், மலையாள மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் வினித் ஸ்ரீனிவாசனுடன் அவர் நடித்து விரைவில் வெளி வர உள்ள படம் தங்கம். இந்த படத்தை பிரபலப்படுத்தும் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் நடைபெற்றது.
விழா மேடையில் அமர்ந்திருந்த நடிகை அபர்ணா பாலமுரளியிடம் வந்த கல்லூரி மாணவர், அவருக்கு பூ கொடுத்து விட்டு சட்டென தோளை அணைத்து புகைப்படம் எடுக்க அழைத்தார். போட்டோ எடுக்க வந்த அபர்ணா பாலமுரளியின் தோள் மீது மாணவர் கையை போட முயன்ற நிலையில், அதை சற்றும் விரும்பாத அபர்ணா, அவரின் பிடியில் இருந்து நழுவி மீண்டும் தனது இருக்கையில் சென்று அமர்ந்தார்.