புதுச்சேரி:புதுச்சேரி திருபுவனை பகுதியில் உள்ள சன்னியாசிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 18 வயது பெண் அரசு கலைக் கல்லூரியில் முதலமாண்டு படித்து வருகிறார். மாணவி தந்தையின் தங்கை மகனான இளைஞர் மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்தார். இதற்கு அம்மாணவி மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த இளைஞர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று(ஜூலை 19) மாலை மாணவி தனியார் பேருந்தில் இருந்து சன்னியாசிக்குப்பம் கடை வீதியில் இறங்கி வீட்டிற்கு செல்ல முற்பட்டபோது கத்தியுடன் மறைந்திருந்த அந்த இளைஞர் திடீரென மாணவியின் கழுத்து கை, கால் பகுதியில் சரமாரியாக வெட்டினார். இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் மாணவி சரிந்தார். .உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததை பார்த்து இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.