தெலங்கானா: தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம், ரெகுபள்ளி பகுதியைச் சேர்ந்த பிரவீன் - ஸ்டெல்லா தம்பதியின் 2 வயது பெண் குழந்தை, ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி-2 என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டது. மூளையை பாதிப்பதால், இந்த நோய் தாக்கியவர்களால் தானாக பேசவோ, நடக்கவோ, சாப்பிடவோ முடியாது.
இந்த நோயை குணப்படுத்த Zolgensma என்ற ஊசியை, அமெரிக்கா அல்லது சுவிட்சர்லாந்தில் இருந்து வரவழைக்க வேண்டும். வரி உள்பட சுமார் 22 கோடி ரூபாய் செலவாகும். இந்த ஊசியை வாங்கும் அளவுக்கு பொருளாதார வசதி இல்லாததால், பிரவீன் - ஸ்டெல்லா தம்பதி சமூக வலைதளம் மூலம் நிதியுதவி கோரினர்.
இந்த நிலையில், முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான நோவார்டிஸ் பார்மா 16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசியை இலவசமாக வழங்கியது. இதையடுத்து பொதுமக்களின் நன்கொடையால் போதுமான நிதி திரட்டப்பட்டு, சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. செகந்திராபாத்தில் உள்ள ரெயின்போ மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அண்மையில் சிறுமி குணமடைந்து வீடு திரும்பினார்.