கிருஷ்ணகிரி :ஆந்திராவில் திருட்டு வழக்கின் விசாரணையின்போது ரகசிய பகுதியில் அடைத்து சித்ரவதை செய்து துன்புறுத்தியதாகப் பாதிக்கப்பட்டவர்கள் அளித்தப் புகாரின் அடிப்படையில் சித்தூர் காவல் ஆய்வாளர் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம் கல்லூரில் கடந்த சில நாட்களுக்கு முன் 4 கிலோ தங்கம் திருடு போன வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் ஐயப்பா கும்பல் தான் திருடியதாகக் கூறிய சித்தூர் மாவட்டம், புத்தாலப்பட்டு போலீசார், தமிழகத்தைச் சேர்ந்த சிலரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரையும் ரகசியப் பகுதியில் வைத்து போலீசார் விசாரித்ததாக கூறப்படுகிறது. விசாரணையின் போது 6 பேர் மீதும் போலீசார் கடுமையான தாக்குதல் நடத்தி துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த விசாரணையில் கல்லூரில் இருந்து 4 கிலோ தங்கம் திருடப்பட்டு பல்வேறு மாநிலங்களில் விற்கப்பட்டது கண்டறியப்பட்டதாகப் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரில் ஐயப்பா மற்றும் பூமதி ஆகிய இரண்டு பேர் முக்கிய குற்றவாளிகள் எனக் கூறிய சித்தூர் போலீசார், அவர்கள் மீது 31 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்தனர். மேலும் ஐயப்பா மற்றும் பூமதி ஆகியோரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். மீதமுள்ள 4 பேர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில், 4 பேரும் கிருஷ்ணகிரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் விசாரணையில் சித்தூர் போலீசார் தங்களை ரகசியப் பகுதியில் அடைத்து கடுமையாகத் தாக்கி துன்புறுத்தியதாக 4 பேரும் கிருஷ்ணகிரி போலீசில் புகார் தெரிவித்து உள்ளனர். குறிப்பாக, பெண்களைத் துன்புறுத்தி வல்லுறவு வன்கொடுமைக்கு முயன்றுள்ளனர் என்றும்; அவர்தம் உயிர் நிலையில் மிளகாய்ப்பொடியைக் கொட்டி கொடுமைப்படுத்தியுள்ளனர் என்றும் புகாரில் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சித்தூர் மாவட்ட போலீசார் மீது விசாரணை நடத்தக்கோரி சித்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரிஷாந்த் ரெட்டிக்கு கிருஷ்ணகிரி போலீசார் தெரிவித்து உள்ளனர். விசாரணை என்ற பெயரில் ரகசியப் பகுதியில் அடைத்து தமிழகத்தைச் சேர்ந்த 4 பேரை தரக்குறைவாக நடத்தியதாகவும், தாக்கி துன்புறுத்தியது தொடர்பாகவும் ஆந்திரா மாநிலத்தின் நகரி சரக ஆய்வாளர் ஸ்ரீநிவாசந்தி விசாரணை நடத்தினார். கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 4 பேரிடம் விசாரணை நடத்திய நகரி சரக ஆய்வாளர் ஸ்ரீநிவாசந்தி, அது தொடர்பான அறிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், நான்கு பேர் மீது போலீசார் கொடூரத் தாக்குதல் நடத்தியதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரியும் பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, புத்தாலப்பட்டு உதவி காவல் ஆய்வாளர் ஹரிபிரசாத், காவலர் தணிகாசலம் மற்றும் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :மணிப்பூர் கலவரம்.. நடவடிக்கை என்ன? பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்!