மும்பை:சச்சின் டெண்டுல்கரின் நண்பராக அறியப்படும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி குடிப்பழக்கம் காரணமாக பல முறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இவர் மும்பை பாந்த்ராவில் உள்ள குடியிருப்பில் தனது மனைவி ஆண்ட்ரியா ஹெவிட்டுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி, வினோத் காம்ப்ளி மதுபோதையில் வீட்டுக்குச் சென்று தனது மனைவியை மோசமாக திட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் சமையலறைக்கு சென்ற காம்ப்ளி, பாத்திரத்தை எடுத்து மனைவி மீது வீசியுள்ளார். இதில் ஆண்ட்ரியாவின் தலையில் காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று முதலுதவி செய்து கொண்டார். பிறகு காவல் நிலையத்திற்கு சென்று கணவர் மீது புகார் அளித்துள்ளார். தனது கணவர் மதுபோதையில் தன்னை அடித்து துன்புறுத்தியதாகப் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காம்ப்ளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில், தான் வேலை இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், தனது குடும்ப சூழ்நிலைக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் தனது வேலை கொடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார், வினோத் காம்ப்ளி. அவரது குடிப்பழக்கம் காரணமாகவே அவருக்கு கிரிக்கெட் வாரியம் எந்த வித வேலையினையும் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், அவர் மீண்டும் குடிபோதையால் மனைவியை தாக்கி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் குண்டு வெடிப்பு.. திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் உயிரிழப்பு.. மற்றொருவர் படுகாயம்..