பாட்னா: பிகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பிர்பாஹூர் பகுதியைச் சேர்ந்த மூன்று வயதுடைய பெண் குழந்தையை, அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ரூ. 500க்கு விற்றதாக அச்சிறுமியின் குடும்பத்தினர் புகார் கொடுத்துள்ளனர். அச்சிறுமி கடந்த ஜூன் 22அன்று அவரது வீட்டின் பின்புறமுள்ள பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போயுள்ளார்.
இதனைத்தொடர்ந்து சிறுமியின் தந்தை அவரது வீட்டில் வசித்து வருபவரின் 7 வயது மகன், அவரது மகளை பிச்சைக்காரர்கள் கும்பலிடம் 500 ரூபாய்க்கு விற்றுவிட்டதாக குற்றஞ்சாட்டினார். மேலும், சிறுமி கிடைக்காததால் காவல் நிலையத்திலும் புகாரும் அளித்துள்ளார். புகாரையடுத்து காவல் துறையினர் விசாரணையில் அப்பகுதியின் அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.
அதில் குழந்தையின் தந்தை குற்றம்சாட்டிய அச்சிறுவன், சிறுமியை எங்கோ அழைத்துச்சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. இதனைத்தொடர்ந்து சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாட்னா ரயில் சந்திப்பு நிலையத்தில் உள்ள ஒரு முதியவரிடம் சில குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. அந்த முதியவரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தினர்.