வாஷிங்டன் : ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை எதிர்கொள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, நேட்டோ நாடுகள் வழங்கிய ஆயுதங்கள், உதவிகள் குறித்த ராணுவ ரகசியங்களை கசிய விட்டதாக 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார். அமெரிக்க ராணுவத்தின் ரகசியங்கள், தேசிய பாதுகாப்பின் முக்கிய பிரச்சினைகள், உக்ரைன் போர் குறித்த ஆவணங்கள், நட்பு நாடுகள் குறித்து அமெரிக்க உளவுத் துறை வைத்திருந்த கோப்புகள் உள்ளிட்ட முக்கிய ரகசியங்கள் கசிந்ததாக கூறப்படுகிறது.
ராணுவ ரகசியங்களை கசிய விட்டது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஜேக் டெக்சீரியா என்ற 21 வயது இளைஞரை போலீசார் கைது செய்து உள்ளனர். டிஸ்கார் என்ற சமூக ஊடகத்தில் ராணுவ ரகசியம் கசிந்ததாக தெரிவித்த அதிகாரிகள், கடந்த சில ஆண்டுகளாக ஜேக் அந்த தளத்தில் ஈடுகைகளை பதிவிட்டு வந்ததாக தெரிவித்தனர்.
ரகசிய ஆவணங்கள் கசியவிட்டது தேசிய பாதுகாப்புக்கு கடுமையான ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகும் என அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பென்டகன் தெரிவித்து உள்ளது. யார் இந்த ஜேக் டெக்சீரியா என்று பார்க்கையில், மாசசூசெட்ஸ் ஏர் நேஷனல் பிரிவில் முதல் தர விமானப்படை வீரர் என கூறப்படுகிறது.
அவரது சமூக வலைதள பக்கத்தில் ஓடிஸ் விமானப் படை பாதுகாப்பு மையத்தின் 102 வது உளவுப் பிரிவைச் சேர்ந்த வீரர் என பதிவிட்டு உள்ளார். இணைய போக்குவரத்து அமைப்புகளை கையாளும் திறன் கொண்ட ஜேக், ராணுவ தொலைத்தொடர்பு நெட்வொர்க் மற்றும் கேபிளிங் மையங்களை கட்டுப்படுத்தக் கூடியவர் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.