ராய்ப்பூர்: பயங்கரவாத நக்சல் குழுக்களை ஒடுக்க 'பாஸ்டர் ஃபைட்டர்ஸ்' என்னும் காவலர்கள் அடங்கிய படையை சத்தீஸ்கர் அரசு அமைத்துள்ளது. இந்த படையினர் நக்சல் அதிகமாக இருக்கும் பகுதிகளில் பணியமர்த்தப்பட்டு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமல்லாமல் பயங்கரவாத செயல்களை தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பார்கள்.
இந்நிலையில், பாஸ்டர் ஃபைட்டர்ஸ் படை பிரிவினருக்கான இறுதித்தேர்வு முடிவுகள் நேற்று (ஆக. 15) வெளியானது. இதில், உடற்தகுதி தேர்வு, எழுதுத்தேர்வு ஆகியவற்றை வெற்றிகரமாக முடித்து 9 திருநங்கைகள் பாஸ்ட் பைட்டர்ஸ் படைக்கு தேர்வாகியுள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 13 திருநங்கைகள் காவலராக பணியாற்றும் நிலையில், அதில் 9 பேர் பாஸ்டர் ஃபைட்டர்ஸ் படைக்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது திருநங்களை சமூகத்தினரை மட்டுமின்றி பல்வேறு தரப்பினரையும் மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளது. இந்த தேர்வில் வெற்றியடைந்த திவ்யா, தாமினி, சந்தியா சானு, குயின், ஹிமான்ஷி, ரியா, சீமா, பார்கா உள்ளிட்ட 9 திருநங்கைகளும் விரைவில் நகஸல்கள் அதிகம் உள்ள பகுதிகளில் பணியமர்த்தப்பட உள்ளனர்.