ஸ்ரீநகர்:கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சியா பிரிவு முஸ்லீம்கள், இன்று (ஜூலை 27) குருபஜார் முதல் டல்கேட் வழித்தடத்தில் மொஹரம் ஊர்வலத்தை நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். ஜம்மு காஷ்மீர் மாநில நிர்வாகம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து மொஹரம் ஊர்வலம் கோலாகலமாக கொண்டப்பட்டது.
இதன்படி, இன்று காலை 6 மணி முதல் 8 மணி வரை பிஸியான லால் சௌக் பகுதி வழியாக செல்லும் பாதையில் ஊர்வலம் செல்ல அதிகாரிகள் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, குரு பஜார் பகுதியில் காலை 5.30 மணியில் இருந்தே, மக்கள் குவியத் துவங்கினர். 1990களில் காஷ்மீரில் பயங்கரவாதம் வெடித்த நிலையில், அங்கு மொஹரம் ஊர்வலம் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சியா பிரிவினரிடம் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த ஊர்வலத்திற்கு அரசு ஒப்புதல் வழ்ங்கி உள்ள நிலையில், அதற்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த காஷ்மீர் கூடுதல் காவல் துறை இயக்குநர் விஜய் குமார் தெரிவித்து உள்ளார்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு, மொஹரம் மாதம் 8ஆம் தேதி ஊர்வலம், இந்த பாரம்பரிய பாதையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ஊர்வலம் ஒரு வார நாளில் நடப்பதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகக் கூடாது என்பதற்காக காலை 6 மணி முதல் 8 மணி வரை நேரம் வழங்கப்பட்டு உள்ளது.