இந்தியாவில் கரோனா பரவல் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளது. தினந்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது. குறிப்பாக, பணியிடங்கள், குடியிருப்புகள், பள்ளி, கல்லூரிகளில் தான் அதிக அளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகுகின்றன.
அந்த வகையில், உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டம், ரூர்க்கி நகரில் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) அமைந்துள்ளது. இங்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இங்கு படிக்கும் மாணவர்களில் சுமார் 90 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கிருக்கும் ஐந்து தங்கும் விடுதிகள் சீல் வைக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அவை அறிவிக்கப்பட்டுள்ளன.