லூதியானா: பஞ்சாப் மாநிலம், லூதியானா கில் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரக்பீர் சிங். இவரது மகன் ரஜ்பீர் சிங் அங்குள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறான். நடனத்தின் மீது தீராத ஆர்வம் கொண்ட சிறுவன் ரஜ்பீர், முறையாக நடனம் கற்று வருகிறான்.
இந்நிலையில், லூதியானாவில் உள்ள இஷ்மித் நடன அகாடமி சார்பில் நடைபெற்ற நடன நிகழ்ச்சிக்கு ரஜ்பீர் சிங்கை அவரது தந்தை அழைத்துச் சென்றார். மேடை ஏறிய ரஜ்பீர், தனது துள்ளல் நடனத்தால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார். அவரது ஒவ்வொரு நடன அசைவையும் ரசித்த பலர் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். மகனின் நடனத்தை செல்போனில் படம் பிடித்த ரக்பீர், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். 40 விநாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது. அதுமட்டுமின்றி பிரபலங்களின் பார்வையிலும் பதிந்துள்ளது. அந்த வீடியோவை நடிகை சோனம் பஜ்வா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.