புதுச்சேரியில் ஏனாம் பிராந்தியம், ஆந்திர மாநில கோதாவரி ஆற்றுப் படுகையில் உள்ளது. கடல் மற்றும் ஆற்றுப் படுகையில் சில தீவுகளுடன் ஏனாம் இருப்பதால் ஆந்திர குற்றவாளிகளின் கடத்தல் கேந்திரமாக ஏனாம் உள்ளது. சில மாதங்களுக்கு முன் ஏனாமில் இரு தீவுகளில் கள்ளச்சாராயம் தயாரிக்கும் ஊறல்களைக் கண்டுபிடித்து காவல்துறையினர் அழித்தனர்.
புதுச்சேரியில் 8 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு!
புதுச்சேரி: ஏனாம் தீவுகளில் தயாரிக்கப்பட்ட 8 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயத்தை காவல்துறையினர் அழித்து, நூற்றுக்கணக்கான கேன்களை பறிமுதல் செய்தனர்.
இருப்பினும், ஆந்திர மாநிலத்திலிருந்து சாராயம் தமிழ்நாடு, புதுச்சேரிக்கு மறைமுகமாகக் கொண்டு வரப்படுகிறது. இதனைத் தடுக்க ஆந்திர காவல்துறையினரும், ஏனாம் காவல்துறையினரும், கலால் துறையினருடன் இணைந்து ஏனாம் கடலோரத் தீவுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அச்சோதனையில் பைரவலங்கா, பசரூக்கலுவா ஆகிய தீவுகளில் மிகப் பெரிய சாராய தொழிற்சாலை இயக்கியதை அறிந்த காவல்துறையினர் அங்குச் சென்று சோதனையிட்டனர். காவல்துறையினரைக் கண்ட குற்றவாளிகள் கடல் வழியே தப்பித்தனர். தீவுகளில் உள்ள உயரிய மரங்களை வெட்டி மிகப் பெரிய அளவில் தயாரிக்கப்பட்ட 8,000 லிட்டர் கள்ளச்சாராயம், 400 லிட்டர் வெப்பாகு, 700 லிட்டர் எரிசாராயம் ஆகியவற்றைத் தீவிலேயே வைத்து அழித்து நூற்றுக்கணக்கான கேன்களைப் பறிமுதல் செய்தனர்.