இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவிட்-19 தொடர்பான சவால்கள் இருந்த போதிலும், ஒரு குறிக்கோளின் அடிப்படையில் இயங்கிய, இந்திய ரயில்வே கடந்த ஆண்டு சரக்குப் போக்குவரத்தை விட இந்த ஆண்டு அதிக வருவாய் ஈட்டி குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டின் சரக்குப் போக்குவரத்து வருவாயைவிட 2020ஆம் ஆண்டில் அதிக வருவாயை ரயில்வே துறை ஈட்டியுள்ளது. குறிப்பாக, 2020ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 118.13 மில்லியன் டன்கள் மொத்தமாக சரக்கு ஏற்றியுள்ளது. அதற்கு முந்தைய 2019ஆம் ஆண்டு 108.84 மில்லியன் டன்கள் சரக்கு ஏற்றியது. அதாவது 2019ஆம் ஆண்டைவிட 9.29 மில்லியன் டன்கள் அதிகமாகும். இதன் மூலம் ரூ. 11 ஆயிரத்து 788 கோடியே 11 லட்சத்தை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு ஈட்டிய தொகையை விட ரூ. 757 கோடியே 74 லட்சம் அதிகமாகும்.