போபால்: இந்தியாவில் அழிந்துபோன பாலூட்டி இனமான சிவிங்கிப்புலி வகை சிறுத்தைகளை, மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்த திட்டம் மூலம் சிவிங்கிப்புலி வகை சிறுத்தைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து இந்திய காடுகளில் விட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நமீபியா நாட்டிலிருந்து 8 சிவிங்கிப்புலிகள் சரக்கு விமானம் மூலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு கொண்டு வரப்படவுள்ளதாக, மூத்த வனத்துறை அலுவலர் சவுகான் தெரிவித்தார்.
இந்த சிவிங்கிப்புலிகள் ஜெய்ப்பூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மத்தியப்பிரதேச மாநிலத்திற்குக்கொண்டு செல்லப்பட்டு, வரும் 17ஆம் தேதி குனோ தேசிய விலங்கியல் பூங்காவில் விடப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்குக் கொண்டு வரப்படுவதால், வனப்பகுதிகளுக்குள் விடுவதற்கு முன்னதாக சிறுத்தைகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி, இந்த சிறுத்தைகளை தனிமைப்படுத்தும் முகாம்களுக்குள் பிரதமர் மோடி திறந்துவிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் சிவிங்கிப்புலி வகை சிறுத்தைகள் முற்றிலும் அழிந்துவிட்டதாக, கடந்த 1952ஆம் ஆண்டுக்கு இந்திய அரசு அறிவித்தது.
இதையும் படிங்க: இமாச்சல பிரதேசத்தில் மாதுளை பழ பெட்டிகளில் வெட்டப்பட்ட ரூபாய் நோட்டுகள்... போலீஸ் விசாரணை