டெல்லி:வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் நிலவும் சூழ்நிலை குறித்து மத்திய அரசிற்கும், எதிர்கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட சலசலப்பு மற்றும் வார்த்தைப் போருக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் நடப்பு மழைக்கால கூட்டத் தொடரின் ஏழாவது நாளில் இரு அவைகளும் மீண்டும் கூடிய நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஜூலை 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.
மணிப்பூர் நிலைமை குறித்து விவாதிக்க இரு அவைகளிலும் பட்டியலிடப்பட்ட நிரல்கள் அனைத்தும் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்பதில் எதிர்கட்சி கூட்டணி உறுப்பினர்கள் உறுதியாக உள்ளனர். வடகிழக்கு மாநிலத்தில் நிலவும் விவகாரங்கள் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியின் அறிக்கை வெளியிடவும், அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு மக்களவை சபாநாயகர் தேதியை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்கட்சி உறுப்பினர்கள் இன்று முன்வைக்க இருந்தனர். முன்னதாக காங்கிரஸ் மக்களவை எம்பி கௌரவ் கோகோய் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக தாக்கல் செய்தார்.
மணிப்பூர் வன்முறை மீதான விவாதம் மறுக்கப்பட்டதாகவும், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை ஒத்தி வைத்ததைக் கண்டித்தும், நேற்று (ஜூலை 2) எதிர்கட்சி உறுப்பினர்கள் கறுப்புச் சட்டையில் வந்து அவை நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.
நேற்று மாநிலங்களவை துவங்கியதில் இருந்தே, அமளியிலே இருந்து வந்தது. 287 விதியின் கீழ் மணிப்பூர் குறித்த விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எதிர்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர்.
“வெளியுறவுக் கொள்கையில் சமீபத்திய முன்னேற்றங்கள்" என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியதால் பல இடையூறுகளை எதிர்கொண்டார். இந்த கூச்சல், கோஷங்களுக்கு இடையே ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ‘மோடி மோடி’ என்று கோஷம் எழுப்பியதால், அவையில் பெரும் பரபரப்பு நிலவியது.