ஆங்கிலேயர்களின் 200 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு கட்டும் விதமாக அண்ணல் காந்தி 1942ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார். இதில் ஒடிசா பழங்குடியினரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
ஒடிசா மாநிலம் கோரபுட் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டம் நடத்திய காலம் அது. குனுபூரில் உள்ள நூறுக்குக்கணக்கான பழங்குடி மக்கள் தியாகி லக்ஷ்மன் நாயக் தலைமையில் மதிலி காவல் நிலையத்தைத் தாக்கிய சம்பவம் வரலாற்று நிகழ்வாகும். தூரி நதிக்கரையில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிர்த் தியாகம் செய்து ஆங்கிலேயர்களுக்கு தங்கள் விடுதலை உணர்வை அழுத்தமாகப் பதியவைத்தனர்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல பழங்குடி பிரிவினர் தீவிரத்துடன் பங்கேற்றனர். இதில் ஒரு சில முக்கியத் தலைவர்கள் ஆங்கிலேய அரசிடம் சிக்கி மரண தண்டனைக்கு ஆளாகி உயர் தியாகம் செய்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் ஷாஹீன் லக்ஷ்மன் நாயக். இவருடன் இணைந்து போராடிய பல நாயகர்களின் பெயர்கள் காலப்போக்கில் வரலாற்றுப் பக்கங்களிலிருந்து மறைந்து போயின.
அரசாங்கம் கூட லக்ஷ்மன் நாயக்கை எப்போதாவது தான் நினைவில் கொள்கிறது. அவரின் பிறந்தநாள், நினைவு நாளில் மட்டும் அரசு அலுவலர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் டென்டுலிகுமாவில் உள்ள நினைவிடத்தில் வரிசைகட்டி நின்று அஞ்சலி செலுத்துகின்றனர். மற்ற நாளில் அவரையும் அந்த கிராமத்தையும் அரசு மறந்துவிடுகிறது.