மதுரா (உத்தரப் பிரதேசம்): 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களை உலுக்கும் இரண்டு சம்பவங்கள் நடைபெற்றன. ஒன்று 1805இல் நடந்த ஆங்கிலேய- மராத்தியர்கள் போர். இந்தப் போரில் ஆங்கிலேயர்கள் 3200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
எட்டாயிரம் முதல் 10 ஆயிரம் வீரர்கள் வரை காயமுற்றனர். எனினும் பரத்பூர் கோட்டையை ஆங்கிலேயர்களால் நெருங்க முடியவில்லை. கடைசியாக வேறு வழியின்றி ஆங்கிலேயர்கள் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
நாம் பார்க்கப்போகும் இரண்டாவது சம்பவம் உருக்கமானது. இது உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்ட தலைநகரிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அடீங் என்ற பகுதியில் நடந்தது. இந்தப் பகுதியில் ராஜபுத்திரர்கள் செல்வச்செழிப்புடன் திகழ்ந்தனர். இவர்களை வெற்றிகொண்டு எப்படியாவது அவர்களின் கோட்டையைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பது ஆங்கிலேயர்களின் எண்ணமாக இருந்தது.
80 ராஜபுத்திர வீரர்களுக்குத் தூக்கு
எனினும் அது சாத்தியப்படவில்லை. 1857 புரட்சியின்போது ஆங்கிலேயப் படைகள் ராஜபுத்திரர்களிடம் தோல்வியைக் கண்டன. இறுதியாகப் பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பின்னர் சமாதானம் என்னும் வெள்ளைக்கொடியை ஆங்கிலேயர்கள் தூக்கிப் பிடித்தனர். இதை நம்பிய ராஜபுத்திர வீரர்கள் 80 பேரை சிறைப்பிடித்து அவர்களைத் தூக்கிலிட்டனர். இந்தச் சம்பவம் வரலாற்றின் பக்கங்களிலும் பதிவாகியுள்ளது.
இதை வரலாற்று ஆய்வாளர் சத்ருகன் சர்மாவும் உறுதிப்படுத்துகிறார். அவர் கூறுகையில், “ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பலகட்ட போராட்டங்களை ராஜபுத்திர வீரர்கள் முள்னெடுத்தனர். அதன் நீட்சியாக ஆங்கிலேயர்களால் ராஜபுத்திர சமஸ்தானத்தைக் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியைக் கையாண்டனர். ஆங்கிலேயர்களின் இந்தச் சூழ்ச்சி குறித்து ராஜபுத்திரர்கள் ஏதும் அறியார்கள்.
சிதிலமடைந்த கோட்டை
ஆகையால் அவர்களிடம் வலியபோய் சிக்குண்டுவிட்டார்கள். நாட்டின் விடுதலைக்காகப் போராடிய அவர்கள் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டு, தூக்கிலிடப்பட்டனர். இதற்கான வரலாற்று ஆவணங்கள் இன்றளவும் உள்ளன. இந்தக் கோட்டை 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போது சிதிலமடைந்து உள்ளது” என்றார்.
மதுராவில் உள்ள ராஜபுத்திரர்களின் கோட்டையான பூரணி ஹவேலி (Purani Haveli) ஃபோண்டமால் ஜாட் (Fondamal Jatt) என்பவரால் கட்டப்பட்டது. ஆதலால் இக்கோட்டை ஃபோண்டராம் கி ஹவேலி ( Fondaram ki Haveli) என்றும் அழைக்கப்படுகிறது. தற்போது இந்தக் கோட்டையின் கட்டடங்கள் சிதிலமடைந்து காணப்படுகின்றன.