கேசரி சிங் என்ற புரட்சி நாயகனின் புகழை ஷாஹ்பூரா பகுதியைச் சேர்ந்த ஒவ்வொரு அணுவும் எதிரொலிக்கும். தியாகம், வீரம், சக்தி ஆகியவற்றுக்கு அடையாளமாக விளங்கும் இந்த ஷாஹ்பூர பகுதி ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாரா மாவட்டத்தில் உள்ளது.
இங்குள்ள அருங்காட்சியகம் கேசரி சிங், அவர் சகோதரர் சொராவர் சிங், மகன் பிரதாப் சிங் பர்ஹாத் ஆகியோரின் புகழை பறைசாற்றுகிறது. கேசரி சிங் பயன்படுத்திய டர்பன் இன்றும் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
1872ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி ஷஹ்பூரா பகுதியில் பிறந்தவர் கேசரி சிங். இளைஞர்களின் மனதில் புரட்சியை விதைத்தவர். அவரின் குடும்பமே விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியது.
நாட்டின் விடுதலைப் போராட்டம் தொடர்பான ஆலோசனைகளை கேசரி சிங் தனது இல்லத்தில் பல முறை ரகசியமாக மேற்கொண்டுள்ளார். அண்ணல் காந்திக்கும் தனது முழு ஆதரவையும் தந்துள்ளார். சோரத் ராகத்தில் உருவான 'சேத்தாவனி ரா' என்ற பாடலை இயற்றி மக்கள் மனதில் புரட்சிக் கருத்துக்களை விதைத்தார் கேசரி சிங்.
1912ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி, டெல்லி சாந்தினி சௌக் பகுதியில் நடைபெற்ற ஹார்டிங் பிரபுவின் ஊர்வலத்தில் கேசரி சிங்கின் இளைய சகோதரர் சோர்வார் சிங் குண்டு வீசினார். இந்தச் சம்பவத்தின்போது கேசரி சிங்கின் மகன் பிரதாப் சிங்கும் உடனிருந்தார்.