‘நாம் எதிரிகளின் தோட்டாக்களைத்தான் எதிர்கொள்ளப்போகிறோம்; நாம் சுதந்திரமானவர்கள்; சுதந்திரத்தை மீட்போம்’ என்ற இந்த வீர முழக்கத்திற்குச் சொந்தக்காரர் சந்திர சேகர் திவாரி. சந்திர சேகர் அசாத் என அறியப்படும் இவர் நாட்டின் விடுதலைக்காக தன் இளமைக் காலத்தை அர்ப்பணித்த தியாகிகளில் ஒருவராவார். அவரின் வாழ்வு மட்டும் அல்ல; இறப்பும் இந்திய விடுதலைப் போரில் ஒரு தீப்பொறியாகப் பெரிய புரட்சியை உருவாக்கியது.
பல புரட்சியாளர்களின் உயிர்த் தியாகத்தினால் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலம் முற்றுப்பெற்று சுதந்திரமான இந்தியா உருவானது. அத்தகைய புரட்சியாளர்களின் தியாகத்திற்குப் பலனாக நாம் தற்போது சுதந்திரமான மக்களாட்சியின்கீழ் வாழ்ந்துவருகிறோம். மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் 1906ஆம் ஆண்டு அசாத் பிறந்தார். அசாத் தனது 15ஆம் அகவையில் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டார்.
பனாரஸ் (தற்போதைய வாரணாசி) ஒத்துழையாமை இயக்கத்தில் (1920-21) கலந்துகொண்டதால் அசாத் கைதுசெய்யப்பட்டு நீதிபதி முன் நிறுத்தப்பட்டார், நீதிபதியிடம் தனது பெயரைக் கூறுகையில் எனது தந்தை பெயர் “அசாத்” எனவும் (அசாத் என்றால் உருது மொழியில் விடுதலை அல்லது சுதந்திரம் பொருள்), எனது முகவரி சிறை எனவும் கூறி ஆங்கில அரசிடம் தன் விடுதலை வேட்கையை தீரமுடன் வெளிப்படுத்தினார்.
அதனைக் கேட்டு ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு காவல் துறையினரைக் கொண்டு அவரைக் கடுமையாகத் தாக்கியது. இந்த வீர நிகழ்வால் இந்திய தேசிய காங்கிரசில் புகழ்பெற்று, அன்றைய காங்கிரசின் பெரும் புள்ளியாக உருவெடுத்தார். அந்நாளிலிருந்து சந்திர சேகர் திவாரி மாற்றமடைந்து சந்திர சேகர் அசாத் என அழைக்கப்பட்டார்.
1922ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சவுரி சவுரா என்ற இடத்தில் புரட்சியாளர்கள் கும்பல், சில காவல் துறையினரைக் கொலைசெய்தனர். இதனையடுத்து, மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்டார். காந்தியின் இந்தச் செயலால் அசாத் அதிருப்தி அடைந்தார்.
மேலும் அசாத் விடுதலைப் போரில் இருந்த தீவிரவாத அமைப்பினரான இந்துஸ்தான் குடியரசு அமைப்பில் இணைந்தார். 1925 ஆகஸ்ட் 9 அன்று இந்துஸ்தான் குடியரசு அமைப்பினரால் ஒரு ரயில் கொள்ளை நடைபெற்றது. கக்கோரி ரயில் கொள்ளை இந்திய சுதந்திரப் போரில் போரிட்ட தீவிரவாத அமைப்பின் மிகப்பெரிய சம்பவம் ஆகும். அந்த அமைப்பின் ஆயுதத் தேவைக்காக இக்கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது.