அகமதாபாத்: அண்ணல் காந்தியடிகள் 1919இல் நவ்ஜீவன் அறக்கட்டளையை தொடங்கினார். அன்று முதல் இன்று வரை இந்திய சுதந்திர இயக்கம் மற்றும் காந்தியக் கொள்கைகளைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமுள்ள அனைவருக்கும் இலக்கியம் மற்றும் இலட்சியங்களின் அறிவு இல்லமாக இந்த அறக்கட்டளை திகழ்கிறது.
18 மொழிகளில் 1,000க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ள இந்த அறக்கட்டளை பல தசாப்தங்களாக நாட்டின் வளர்ச்சிக்கு உதவிவருகிறது. 1919 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி நவ்ஜீவன் வார இதழின் ஆசிரியராக காந்திஜி நியமிக்கப்பட்டபோது இந்த அறக்கட்டளையை அவர் நிறுவினார்.
அகிம்சை, சுதந்திரம் மற்றும் வகுப்புவாத நல்லிணக்கம் போன்ற காந்திஜியின் கொள்கைகளை வாசகர்களிடையே பரப்புவதே இதன் முக்கிய நோக்கம்.
சர்தார் வல்லபாய் பட்டேல்
வார இதழின் புகழ் வளர்ந்ததும், அது பெரிய அச்சகத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் வார இதழை அச்சிட நவ்ஜீவன் முத்ரானாலயா நிறுவனம் பிப்ரவரி 11, 1922 இல் தொடங்கப்பட்டது.
இதற்கிடையில், நவ்ஜீவன் அறக்கட்டளை 27 நவம்பர் 1929 இல் பதிவு செய்யப்பட்டது, சர்தார் வல்லபாய் பட்டேல் அதன் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்தி, குஜராத்தி மற்றும் பிற இந்தோ-ஆரிய மொழிகளில், நவ்ஜீவன் என்றால் புதிய வாழ்க்கை என்று பொருள். நவ்ஜீவன் அறக்கட்டளையின் நோக்கம், குடிமக்களை அறிவூட்டுவதும், 'சுயராஜ்யத்தை' அடைவதற்கான அமைதியான முறைகள் மூலம் அவர்களுக்கு கல்வி கற்பிப்பதும் ஆகும். ஒரு புதிய வாழ்க்கையை கொடுக்கவும் குறிப்பாக காந்திய சித்தாந்தத்தை முன்னேற்றவும் இது வழிகோலுகிறது.