டெல்லி:அக்னிபத் திட்டத்தை கடந்த 14ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படும் அக்னி வீரர்கள் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே சேவையாற்ற முடியும். நான்கு ஆண்டுகள் சேவை முடித்தவர்களில் 25 விழுக்காடு பேருக்கு தகுதியின் அடிப்படையில், ராணுவத்தில் நிரந்தர வேலை கிடைக்கும். இத்திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர்வதற்கான வயதுவரம்பு 17.5 வயது முதல் 21 வயது வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த வயது வரம்பு 23ஆக அதிகரிக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு பிகார், தெலங்கானா உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்புத்தெரிவித்தன. இத்திட்டத்தை ரத்து செய்யும்படி எதிர்க்கட்சி எம்.பிக்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தின்கீழ் விமானப்படையில் சேர, ஏழரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப்பதாக விமானப்படை தலைவர் விஆர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஆர் சவுத்ரி கூறுகையில், "அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு, கடந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கியது. இதுவரை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இது இளைஞர்களின் ஆர்வத்தைக் காட்டுகிறது.