பெங்களூரு: கர்நாடகா மாநிலம், பெலாவி மாவட்டததில் உள்ள ஒரு கிராமத்தில் பெண் ஒருவரை மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்குதல் நடத்தியதோடு, நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக கொண்டு சென்ற மனிதாபிமானம் இல்லாத ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் மகனும், அதேப் பகுதியைச் சேர்ந்த மற்றொருவரின் மகளும் வீட்டை விட்டு ஓடி சென்றதால் ஆத்திரமடைந்த பெண்ணின் வீட்டார் இந்த அநாகரீகமான செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஒரே கிராமத்தைச் சேர்ந்த இளைஞரும், இளம்பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இதற்கு ஆரம்பத்தில் இருந்தே, பெண்ணின் வீட்டார் தரப்பில் இருந்து எதிர்ப்பு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இளம்பெண்ணும் இளைஞரும் வீட்டை விட்டு வெளியேறி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, இளைஞரின் வீட்டிற்கு சென்று தனது மகளை எங்கே எனக்கேட்டு அடாவடி செய்த பெண்ணின் வீட்டார், இளைஞரின் வீட்டை அடித்து துவம்சம் செய்தனர். தொடர்ந்து, இளைஞரின் 42 வயதான தாயாரை, இன்று (டிச.11) மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து, அவரை ஊரில் உள்ள மின் கம்பம் ஒன்றில் கட்டிவைத்து நிர்வாணப்படுத்தியதோடு ஊர்வலமாக கொண்டு சென்ற சம்பவமும் அரங்கேறியுள்ளது.
இந்த சம்பவம் அம்மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது குறித்து போலீசார் கூறுகையில், 'பாதிக்கப்பட்ட பெண்ணின் மகனும், ஒரு இளம்பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வந்தநிலையில், நேற்று காதலர்கள் வீட்டைவிட்டு ஓடிவிட்டனர். இளம்பெண்ணின் குடும்பத்தினர் அவருக்கு வேறு ஒரு இளைஞனுடன் திருமணம் செய்து வைப்பதற்காக எண்ணி இன்று அவரது நிச்சயதார்த்த விழாவும் நடக்க இருந்தது. தொடர்ந்து, திருமண தேதியையும் குடும்பத்தினர் நிச்சயித்தனர். ஆனால், நிச்சயதார்த்த நாளுக்கு முன்பே காதலர்கள் ஓடிவிட்டனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்த காகத்தி காவல்நிலைம் போலீசார் இது தொடர்பாக, 7 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். நகர காவல் ஆணையர் எஸ்.என்.சித்தராமப்பாவும், சம்பந்தப்பட்ட கிராமத்தில் விசாரணை மேற்கொண்டார். மேலும், தப்பியோடிய இளைஞர் மற்றும் இளம்பெண்ணை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிராமத்தில் மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க, 2 கர்நாடக மாநில ரிசர்வ் போலீஸார் குழுவும் நிறுத்தப்பட்டுள்ளது.' என்றார்.