டெல்லி: டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில், ஆன்லைன் மூலம் போலி மருந்துகளை விற்பனை செய்த 7 பேர் கொண்ட கும்பலை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்கள், புற்றுநோய்க்கான மருந்துகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் எனக்கூறி ஏராளமான மக்களிடம் போலி மருந்துகளை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து சுமார் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதானவர்களின் மருத்துவர்கள், அரசியல் பிரமுகர்களும் அடங்குவர்.
இதுகுறித்து பேசிய சிறப்பு காவல் ஆணையர் ரவீந்திர சிங் யாதவ், "இந்த வழக்கில் மருத்துவர்கள், பொறியாளர்கள், எம்பிஏக்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் தலைமறைவாக உள்ளனர், அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள். உள்நாட்டில் கிடைக்காத மருந்து எனக்கூறி போலி மருந்துகளை விற்பனை செய்துள்ளனர்.
சோனிபட் உள்ளிட்ட இடங்களில் இவர்களது ஆலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காசியாபாத்தில் உள்ள ஒரு குடோன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அங்கு தனி எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு சமூக ஊடகங்கள் மூலம் மருந்துகளை விற்பனை செய்து வந்தனர். தற்போது பிடிபட்ட போலி மருந்துகளின் மதிப்பு எட்டு கோடி ரூபாய்.