கொல்கத்தா:மேற்கு வங்கத்தில் இன்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. மாநிலத்தின் வடக்கிலுள்ள ஒரு மாவட்டம், தெற்கிலுள்ள மூன்று மாவட்டங்களுக்கு உட்பட்ட 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த 43 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ், பாஜகவுக்கு இடையேதான் போட்டி இருக்கும் எனக்கூறப்படுகிறது.இந்த 43 தொகுதிகளிலும் தங்களது வலிமையை அதிகரிக்க 2016 முதல் 2019வரையிலான கால கட்டத்தில் பாஜக கடும் முயற்சிகளை எடுத்தது. அதன்விளைவாக, 2019 தேர்தலில் இத்தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளும் துடைத்தெறியப்பட்டனர். நிலைமை இவ்வாறு இருக்க, தற்போது உருவாகியுள்ள போட்டி சுவாரசியமாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
பாஜக-திரிணாமுல் கடும் போட்டி
2019ஆம் ஆண்டு இந்த தொகுதிகளில் கவனிக்கத்தக்க செயல்களைச் செய்த பாஜக, இந்தத்தேர்தலில் தங்களது செயல்பாடுகளை முடுக்கிவிட்டது. அதேநேரம், வலதுசாரி முகாம்களிடம் இழந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் கடும் பணிகளைச் செய்துள்ளது.
2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த 43 தொகுதிகளில் 32 தொகுதிகளை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும், ஏழு தொகுதிகளை காங்கிரஸ் கட்சியும், நான்கு தொகுதிகளை இடது முன்னணிக் கூட்டணியும் கைப்பற்றின. ஆனால், இந்தக் காட்சி 2019 மக்களவைத் தேர்தலில் முழுவதுமாக மாறியது.