நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
"கடந்த 2014-15ஆம் நிதியாண்டில் பாதுகாப்பு தளவாட பொருட்கள் ரூ.1,940.64 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இது 2020-21ஆம் நிதியாண்டில் ரூ.8, 434.84 கோடியாக உயர்ந்துள்ளது.
யுக்தி காரணங்களுக்காக, ராணுவ தளவாட பொருட்களின் பெயர்களை வெளியிட முடியாது. ராணுவ தளவாட ஏற்றுமதிகளை அதிகரிக்க கடந்த 5 ஆண்டுகளில் பல சீர்த்திருத்தங்கள், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதிக்கான ஒப்புதல்கள் முழுவதும் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகின்றன.
ஏற்றுமதிக்கான செயல்பாட்டு விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. ஒரே மாதிரியான பொருட்களுக்கு மீண்டும் ஆர்டர் கொடுக்கும்போது, உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது.
பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியை ஊக்குவிக்க, நட்பு நாடுகளுடன் இணைய கருத்தரங்குகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. ஆயுத தொழிற்சாலைகளில் தன்னாட்சி, திறன், மற்றும் புத்தாக்கத்தை அதிகரிக்க 41 ஆயுத தொழிற்சாலைகள், ஏழு பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளன.
2020-21ஆம் ஆண்டில் 64 விழுக்காடு ராணுவ தளவாடங்கள் இந்திய உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.76,073.98 கோடியாகும்" என்றார்.
இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் - இரு காவலர்கள் மரணம்