சத்னா:மத்தியப்பிரதேசம் மாநிலம் சத்னா மாவட்டம் அதர்வேடியா குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்த் குஷ்வாஹா (62). இவரது மனைவி கஸ்தூரி பாய் (60). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு, இவர்களது மகன் அவரது 18வது வயதில் விபத்தில் உயிரிழந்து உள்ளார்.
எனவே, கோவிந்த் - கஸ்தூரி பாய் தம்பதி குழந்தை இன்றி தவித்து வந்து உள்ளனர். இதனால் கஸ்தூரி பாய், தனது கணவரான கோவிந்திடம் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி உள்ளார். இதன் காரணமாக, கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்த் குஷ்வாஹா, ஹீராபாய் குஷ்வாஹா (30) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து உள்ளார்.
இந்த நிலையில், திருமணமாகி 6 வருடங்களுக்குப் பிறகு கர்ப்பம் தரித்த ஹீராபாய்க்கு கடந்த ஜூன் 12ஆம் தேதி இரவு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் உடனடியாக அருகில் இருந்த மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து, நேற்றைய முன்தினம் (ஜூன் 13) காலை ஹீராபாய்க்கு அறுவை சிகிச்சை மூலம் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்து உள்ளார்.
இந்த நிகழ்வு மாவட்ட மருத்துவமனையின் நிர்வாகி டாக்டர் அமர் சிங் கூறுகையில், “சாதாரணமாக பிரசவம் 35 வாரங்களில் நிகழும். ஆனால், ஹீராபாய்க்கு 34 வாரங்களிலேயே குழந்தைகள் பிறந்ததால் மூன்று குழந்தைகளுமே குறைமாத குழந்தையாக உள்ளனர்” என தெரிவித்து உள்ளார்.