பெங்களூரு:கொப்பல் மாவட்டம், குஸ்டகி தாலுகாவில் உள்ள கலகேரி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, அதே சாலையில் லாரி ஒன்றும் வந்து கொண்டிருந்தது. இதனிடையே, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் அதிவேகத்தில் எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துள்ளனாது. லாரியின் முன்பக்கத்தின் அடிப்பகுதியில் கார் முழுவதுமாக மாட்டிக்கொண்டதில் கார் அப்பளம் போல நொறுங்கியது.
இந்த பயங்கர விபத்தை அடுத்து, அப்பகுதியினர் காரில் இருந்தவர்களை மீட்க முயன்ற போது, காருக்குள் இருந்த அனைவரும் உடல் நசுங்கி உயிரிழந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனைத்தொடர்ந்து, இந்த பயங்கர விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குஸ்டகி காவல்நிலைய போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பினர்.
முதல் கட்ட விசாரணையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ராஜப்பா பனகோடி, ராகவேந்திரா, அக்ஷயா சிவசரண், ஜெயஸ்ரீ, ராக்கி மற்றும் ராஷ்மிகா ஆகியோர் எனவும் இதில் இருவர் குழந்தைகள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.