டெல்லி: இந்தியாவில் நெட்வொர்க் அலைக்கற்றை 4 ஜி உபயோகத்தில் இருந்து வருகிறது. தற்போது 5 ஜி அலைக்கற்றைகான ஏலம் இன்று நடைபெற இருக்கிறது. இந்த 5 ஜி அலைக்கற்றைகான உரிமம் பெறுவதற்கு நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இது குறித்து கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் 5 ஜி சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக சில மாதங்களுக்கு முன் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மோடி தலைமையின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த ஏலத்தில் பங்கேற்க ஏர்டெல், வோடாபோன் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ, அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்க விண்ணப்பித்துள்ளன. இதனையடுத்து சில நாட்களுக்கு முன் மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்பதற்கான தகுதி பெற்ற நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் அதானி குழுமம் ஆகிய நிறுவனங்கள் தேர்வாகின.
ரிலையன்ஸ்க்கு வாய்ப்பு அதிகம்:இந்த ஏலத்திற்கான வைப்புத் தொகையாக (EMD -Earnest Money Deposit) நான்கு நிறுவனங்களும் ரூ.21,800 கோடி செலுத்தின. இதில் அதிகபட்சமாக அம்பானி குழுமத்தின் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ14,000 கோடியை செலுத்தியது. இதனால் இந்த ஏலம் ரிலையன்ஸ் குழுமத்திற்கு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
மேலும் ஏர்டெல் நிறுவனம் ரூ.5,500 கோடி வைப்புத் தொகையும், வோடாபோன் நிறுவனம் ரூ.2,200 கோடியும் செலுத்தியுள்ளன. அதானி குழுமம் சார்பில் ரூ.100 கோடி செலுத்தப்பட்டது. இன்று (ஜூலை 26) ஏலம் நடக்க இருக்கும் நிலையில் அம்பானி குழுமத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5ஜியின் சிறப்பம்சங்கள்:கடந்த சில வருடங்களாக மொபைல் போனில் வீடியோ பார்க்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்த 5G தொழில்நுட்பத்தின் அறிமுகத்தால் உபயோகதாரர்களுக்கு புதிய அனுபவத்தை தர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகம் அதிகரிக்கப்பட்ட இந்த 5ஜி அலைவரிசை மூலம் வீடியோ ஸ்ட்ரீமிங் வேகம் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, சில ஆய்வுகள் மெய்நிகர் ரியாலிட்டி மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி வீடியோக்களையும் பார்க்க முடியும் என்று கூறுகின்றன.
இதுவரை நாம் பயன்படுத்திய அலைக்கற்றைகளில் 5ஜி ஒரு சிறந்த அனுபவத்தை தர இருக்கிறது. இதன் படி 2 ஜி அலைக்கற்றை மூலம் ஒரு மணி நேர வீடியோவை பதிவிறக்கம் செய்ய 2.8 நாட்கள் ஆகும். 3 ஜி சேவை மூலம் அதே ஒரு மணிநேர வீடியோவிற்கு 2 மணிநேரத்திற்குள் பதிவிறக்கம் செய்யலாம். தற்போது நாம் உபயோகித்து வரும் 4 ஜி சேவையில் ஒரு மணிநேர வீடியோவிற்கு 40 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். ஆனால் தற்போது அறிமுகமாக இருக்கும் 5 ஜி சேவையில் மிக சுலபமாக 35 வினாடிகளில் அதே வீடியோவை டவுன்லோட் செய்ய முடியும்.
இதையும் படிங்க:10 மடங்கு வேகம் பெறப்போகும் இணைய சேவை...! 5ஜி ஏலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்