குஜராத்:எச்3 என்2 எனப்படும் இன்புளுயன்சா காய்ச்சல் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பரவி வருகிறது. கரோனா போன்று இந்த வகை வைரஸ் காய்ச்சலுக்கும் சளி, தும்மல், இருமல், சுவாச பிரச்சினைகள் உள்ளிட்ட பாதிப்புகள் அறிகுறிகளாக காணப்படுகிறது. இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் இன்புளுயன்சா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான பெண்மணி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. வதோதரா பகுதியைச் சேர்ந்த அந்த 58 வயது பெண்மணி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காய்ச்சல் உள்ளிட்ட உடல் நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இருப்பினும் இது தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதேநேரம் அந்த முதிய பெண்மணி உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருந்ததாகவும், வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
மூதாட்டியிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் எச்3 என்2 அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக மருத்துவரகள் தெரிவித்து உள்ளனர். இதன்மூலம் வதேதரா மாநகராட்சியில் பதிவான முதல் எச்3என்2 வைரஸ் உயிரிழப்பு எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.