டெல்லி: இந்திய மீனவர்கள் 577 பேரை பாகிஸ்தான் அரசு சிறைப்பிடித்துள்ளதாகவும், அவர்களை மீட்பதற்கு இந்திய அரசு முயற்சி எடுத்து வருவதாகவும் இன்று (மார்ச் 25) மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வீ முரளிதரன் கூறுகையில், ‘ எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய மீனவர்கள் 577 பேரை பாகிஸ்தான் அரசு பிடித்துள்ளது’ எனத் தெரிவிததார்.
மே 21, 2008இல் கையெழுத்திடப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் "தூதரக அணுகல் ஒப்பந்தத்தின்"படி, ஒவ்வொரு நாட்டின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சிவில் கைதிகள் மற்றும் மீனவர்களின் பட்டியல்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 அன்று பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. இதன் அடிப்படையில் இந்த மீனவர்களின் எண்ணிக்கை விவரம் பரிமாறப்பட்டுள்ளது.
மேலும் அவர் கூறுகையில், 'இந்திய அரசின் தகவலின்படி இதுவரை 1,164 இந்திய மீனவர்களின் படகுகள் பாகிஸ்தான் அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் அரசு இந்த படகுகளைப் பற்றி எந்த தகவலும் அளிக்கவில்லை. பாகிஸ்தானின் இத்தகைய செயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் இந்திய மீனவர்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும். இத்தகைய கைதுகளை முன்கூட்டியே தடுக்க பாகிஸ்தான் அரசிடம் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாகவும்’ தெரிவித்தார்.