தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மூடப்பட்ட புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலை: ஊழியர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவு! - கூட்டுறவு சர்க்கரை ஆலை பணியாளர்கள் சங்கம்

புதுச்சேரி: புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்டதால் வேலை இழந்த 61 பணியாளர்களுக்குத் தீபாவளியை முன்னிட்டு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

By

Published : Nov 13, 2020, 5:19 PM IST

புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்டதால், அங்கு பணிபுரிந்த 61 பேர் தங்கள் பணிக்காலப் பணப்பலன்களை வழங்க புதுச்சேரி அரசிற்கும், சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கும் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் மனுக்களை கொடுத்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததால், 23 கோடி ரூபாய்க்கும் மேல் உள்ள பணப்பலன்களை வழங்கும் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி பாரதிய புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு சற்றுகால அவகாசம் தேவைப்படும் எனவும் புதுச்சேரி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பணப்பலன்கள் வழங்கப்படாததால், தீபாவளியைக் கொண்டாட முடியாமல் பணியாளர்கள் சிரமப்படுவதாக, மனுதாரர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தீபாவளி பண்டிகை வருவதால், சர்க்கரை ஆலை பணியாளர்கள் 61 பேருக்கும் ஆறுதல் தொகையாக தலா 5 ஆயிரம் ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தும்படி ஆலை நிர்வாகத்திற்கும், அதற்கான 3 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை விடுவிக்கும்படி புதுச்சேரி அரசிற்கும் நீதிபதி சுரேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் தொகை பணியாளர்கள் கணக்கில் செலுத்தப்பட்டது குறித்து டிசம்பர் 2ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details