சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ராஜதானி மருத்துவமனையில் நேற்று மாலை, மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு முழுவதும் பரவியுள்ளது. ஐசியுவில் 30-க்கும் மேற்பட்ட நபர்கள் சிகிச்சைப் பெற்றுவந்ததாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினரும், தீயணைப்புத் துறையினரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஐசியுவில் சிக்கியிருந்த 29 நோயாளிகளைப் பத்திரமாக மீட்டு, மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இவ்விபத்தில் ஐந்து கரோனா நோயாளிகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.