பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற்கோயில் அருகே கடந்த 6ஆம் தேதி நள்ளிரவில், ஒரு கட்டிடத்தின் பெரிய ஜன்னல் கண்ணாடி வெடித்தது. இதில் கோயிலுக்கு வந்த பக்தர்கள் சிலர் காயமடைந்தனர். கட்டிடத்தின் அருகில் இருந்த உணவகத்திலிருந்து வெளியான வெப்பத்தால் கண்ணாடி வெடித்திருக்கலாம் என கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 8ஆம் தேதி நள்ளிரவில் பயங்கர சத்தத்துடன் மர்மப்பொருள் வெடித்தது. இது தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொண்ட போலீசார், வெடித்த மர்மப்பொருள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், இன்று(மே.11) அதிகாலையில் பொற்கோயில் அருகே மீண்டும் பயங்கர சத்தத்துடன் மர்மப்பொருள் வெடித்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், வீரியம் குறைந்த குண்டு வெடித்ததாக தெரியவந்துள்ளது. ஐந்து நாட்களில் மூன்றாவது முறையாக பொற்கோயில் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்களிடையே பதற்றம் நிலவுகிறது.