டெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, எதிர்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில், அரசுக்கு எதிராக, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சிகள் திட்டமிட்டு உள்ளனர்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில், பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரி, எதிர்கட்சிகள் தொடர் அமளியின் காரணமாக, இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ராஜஸ்தான் உள்ளிட்ட காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நிகழும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று கூறியதால், அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அறிக்கையை வெளியிட வேண்டும் எனக் கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் நேற்று (ஜூலை 24) நடத்திய போராட்டத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவை நடவடிக்கைகள் முடங்கின. காங்கிரஸின் கூற்றுப்படி, நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்க பிரதமர் மோடி பயப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
ஆனால், இந்த விவகாரத்தில் சில உண்மைகள் வெளிவருவதை எதிர்கட்சிகள் விரும்பவில்லை என்று பாஜக பதில் அளித்து உள்ளது. மணிப்பூர் விவகாரத்தில் எதிர்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிகழ்வின்போது, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், மாநிலங்களவையின் மையப் பகுதிக்கு சென்று நாற்காலியை சுட்டிக்காட்டியதால் சபாநாயகரின் உத்தரவுகளை மீண்டும் மீறியதற்காக அவர் அமர்வு முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டார். அதற்கு முன், மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர், சஞ்சய் சிங்கின் "கட்டுப்பாடற்ற நடத்தைக்கு" எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.