நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கு விவரம் குறித்த பட்டியல் உச்ச நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமிகஸ் க்யூரி(Amicus curiae) மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா இந்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களிலிருந்து புள்ளி விவரங்களை எடுத்து அவற்றை தொகுத்து இந்த பட்டியலை அவர் தயார் செய்துள்ளார். அதன்படி, 2021ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி காலம் வரை, மொத்தம் நான்காயிரத்து 984 வழக்குகள் எம்பி, எம்எல்ஏக்கள் மீது நிலுவையில் உள்ளன.
இவற்றில் இரண்டு வருடத்திற்கும் குறைவான காலத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் 1599, இரண்டு முதல் ஐந்தாண்டு காலம் நிலுவையில் உள்ள வழக்குகள் 1475, ஐந்துவருடத்திற்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள் 1888 என புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
2018ஆம் ஆண்டு அக்டோபரில் இருந்து எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான 2,775 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளன. மக்களின் பிரதிநிதிகளாக முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் மீது இத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது பெரும் அவலம் எனத் தெரிவித்துள்ள வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா, இந்த வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு விசாரணை அமைப்புகள், நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க:திருவள்ளுவர், சானக்கியா ஆகியோரிடம் பாடம் படிக்கும் இந்திய ராணுவம்